பிராமண வர்த்தக கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆளுநர்கள்

கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் இன்று முதல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ள பிராமண வர்த்தக கூட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில ஆளுநர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.

பிராமண தொழிலதிபர்கள் கலந்துக் கொள்ளும் 3 நாட்கள் பிராமண வர்த்தக கூட்டம் இன்று குஜராத் மாநிலம் காந்தி நகரில் தொடங்கி உள்ளது.  திரிமந்திர் வளாகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தை ஒட்டி 200 தொழிலதிபர்கள் அரங்கங்கள் திறந்துள்ளனர்.  இங்கு நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 10000 பேர் வேலை பெற உள்ளன.

முதல் நாளான இன்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.  மேலும் இந்தக் கூட்டத்தில் குஜராத் ஆளுநர் ஆசார்ய தேவவிரத் மற்றும் ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் பங்கு கொள்ள உள்ளனர்.  நாளை இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அமித் சவுதா கலந்துக் கொள்ள உள்ளார்.

இந்த கூட்டத்துக்கு வருகை தருமாறு குஜராத் முன்னாள் முதல்வரும் உ பி ஆளுநருமான ஆனந்திபென்  படேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஒப்புதல் அளித்த அவர் முக்கிய பணி காரணமாக வர இயலாது எனத் தெரிவித்துள்ளார்.  இந்த கூட்டத்தை சமஸ்த குஜராத் பிரம்ம சமாஜம் நடத்துகிறது.

இதே போல் ஒரு கூட்டம் ஏற்கனவே கடந்த 2018 ஏப்ரல் மாதம் நடந்த போது 4200 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர்.   அந்த கூட்டத்தில் பேசிய குஜராத் மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி தனது உரையில் பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கரை பிராமணர்கள் எனக் கூறியது அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தினார்.