ஆமதாபாத்:

தேசிய வாத படைகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள் என கடிதம் எழுதிய கிறிஸ்தவ பேராயருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்து உள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கத்தோலிக்க பேராயர் தாமஸ் மக்வான் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய ஒரு கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘‘ சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற தன்மை வளர்ந்துவருவதால் ஜனநாயக வழியில் தேசியவாத படைகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள்’’ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

‘‘தேசியவாத படைகள் தேசத்தை மொத்தமாக எடுத்துக் கொள்ளும் நிலையில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் நடைபெறும் தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மனித உரிமைகள் மீறப்படுகிறது, அரசியலமைப்பு உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. நம்முடைய பிரார்த்தனை தேசியவாத படைகளிடம் இருந்து தேசத்தை காப்பாற்றும்,”எனவும் கூறியிருந்தார்.

இது மறைமுகமாக பாஜக.வுக்கு எதிராக வாக்களிக்கும்படி கூறுவதாக உள்ளது என்று விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியான காந்திநகர் கலெக்டர் இது தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில், உரிய விளக்கம் அளிக்கும்படி பேராயருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.