குஜராத்: பாலியல் புகாரில் சிக்கிய பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு

காந்திநகர்:

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி பானுசாலி (வயது 53). பாஜக மாநில துணைத் தலைவராக இருந்தார். கடந்த 10ம் தேதி இவர் மீது 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.

கட்ச் தொகுதியில் 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை ஜெயந்தி பானுசாலி எம்எல்ஏ.வாக இருந்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து பாஜக துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் மீது சர்தானா போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். புகார் அளிக்கப்பட்டு 9 நாட்களுக்கு பின்னர் கடந்த 20ம் தேதி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் கமிஷனர் சதீஷ் சர்மா கூறுகையில்,‘‘இந்த புகார் தொடர்பாக பானுசாலி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம், ஆள்கடத்தல் மற்றும் இதர பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை துணை கமிஷனர் லீனா பட்டீல் விசாரணை மேற்கொள்கிறார்’’ என்றார்.

கடந்த மார்ச் மாதம் அகமதாபாத் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். மற்ற நபர்களுடனும் பாலியல் உறவு கொள்ள பானுசாலி வற்புறுத்தியதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.