ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: குஜராத் வீரர் சமித் 359 ரன் எடுத்து 117 ஆண்டு சாதனையை முறியடித்தார்

ஜெய்ப்பூர்:

ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியில் குஜராத் வீரர் சமித் 359 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் அவர் 117 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.
இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை நடக்கிறது.

ஜெய்ப்பூரில் நடக்கும் காலிறுதியில் ஒடிசா, குஜராத் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் குஜராத் 263, ஒடிசா 199 ரன்கள் எடுத்தன. 4ம் நாள் ஆட்ட நேர முடிவில், குஜராத் அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 541 ரன்கள் எடுத்திருந்தது. சமித் கோயல் (261), ஹர்திக் படேல் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று கடைசி மற்றும் 5ம் நாள் ஆட்டம் நடக்கிறது. ஹர்திக் படேல் (18) முந்தைய நாள் ‘ஸ்கோருடன்’ அவுட்டானார். எதிரணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த சமித் முச்சதம் அடித்தார். பும்ரா (13) ஆட்டமிழக்க, குஜராத் அணி 2வது இன்னிங்சில் 641 ரன்களுக்கு ஆல்- அவுட்டானது. சமித் (359 ரன், 45 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) மட்டும் அவுட் ஆகாமல் இருந்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமித், முதல் தர போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி அதிகமாக 359 ரன்கள் குவித்து, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இதற்கு முன் சர்ரே அணி வீரர் பாபி அபெல் 357 ரன்கள் (எதிர்- சாமர்செட், லண்டன், 1899) எடுத்ததே அதிகமாக இருந்தது. இதன் மூலம் 117 ஆண்டு சாதனையை சமித் முறியடித்தார். பிரியங் பன்சலுக்குப்பின், ரஞ்சியில் முச்சதம் அடித்த 2வது குஜராத் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். நடப்பு ரஞ்சி போட்டிகளில் முச்சதம் அடித்த 5வது வீரரானார் சமித் என்பது குறிப்பிடத்தக்கது.