கமதாபாத்

மோடியின் சகோதரரும் குஜராத் நியாயவிலைக்கடை உரிமையாளர் சங்கத் தலைவருமான பிரகலாத் மோடி தொடர்ந்த வழக்கில் அம்மாநில பாஜக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

குஜராத் மாநில நியாயவிலைக் கடைகளுக்கு மாநில அரசு மண்ணெண்ணெய் விநியோகம் செய்து வருகிறது.  மாதா மாதம் வழங்கப்படும்  இந்த மண்ணெண்ணெய் ஒவ்வொரு கடைகளுக்கும் பல தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.  இந்த மண்ணெண்ணெய்யை நியாயவிலைக்கடைகள் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில் குஜராத் அரசு ஒரு மாதத்துக்கான மொத்த மண்ணெண்ணெய்யையும் ஒரே முறை அளிக்கப்படும் என அறிவித்தது.   இதுவரை நியாய விலைக்கடைகளுக்கு அரசு தவணை முறையில் விநியோகம் செய்து வந்ததால்  அவர்கள் அதை வைக்க போதுமான இடத்தை ஒதுக்கி வைத்திருந்தனர்.   ஆனால் தற்போது முழு அளவு மண்ணெண்ணெய் ஒரே நேரத்தில் வழங்கப்படும் என அறிவித்தது.

இதற்கு குஜராத் மாநில நியாய விலைக்கடை உரிமையாளர் சங்கத் தலைவரும் பிரதமர் மோடியின் தம்பியுமான பிரகலாத் மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  தங்களுக்கு இவ்வளவு  மண்ணெண்ணெய் சேகரித்து வைக்க இடம் போதாது எனவும் அரசு தனது உத்தரவை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அரசு அவர் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்துள்ளார். அதையொட்டி குஜராத் மாநில பாஜக அரசுக்கு விளக்கம் கோரி குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.   பாஜக முதல்வரின் தம்பி பாஜக அரசை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.