சண்டிகர்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரின் சாமர்த்தியமான நடவடிக்கைகளே அரியானாவில் மீண்டும் காங்கிரசை துளிர்க்க வைத்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அரியானா மற்றும் மகாராஷ்டிராவில் கடந்த 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த தேர்தலின் முடிவுகளும் வெளி வந்துவிட்டன்.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. ஆனால் அரியானா மாநிலத்தில் எதிர்பார்ப்புக்கு மாறாக கடும் இழுபறி நிலவுகிறது. அந்த மாநிலத்தில், காங்கிரஸ், பாஜக கட்சியினரிடையே கடும் இழுபறி காணப்படுகிறது.

எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது தெரியாத நிலை இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் காங்கிரஸ் எழுச்சி பெற்றிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

வழக்கம் போல காங்கிரஸ் தேறாது என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில் பழுத்த தலைவர்களாக குலாம் நபி ஆசாத், பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோரின் அனுபவமிக்க சாதுர்யத்தால் காங்கிரஸ் பலம் கொண்டுவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது: அரியானா தேர்தலுக்கு முன்பு, அம்மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் குழப்பம் நிலவியது. மாநிலத்தில் உடனடியாக வலுவான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது காங்கிரஸ்.

இந்த தருணத்தில் தான் உள்ளே நுழைகிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். அவருக்கு துணையாக பூபிந்தர்சிங் ஹூடாவும் கைகோர்க்கிறார். அவர்களுடன், அகமது படேல், குமாரி செல்ஜாவும் களத்தில் குதிக்கின்றனர்.

இந்த கூட்டணியின் சாதுர்ய அரசியல் நடவடிக்கைகள், கட்சிக்குள் புது ரத்தத்தை பாய்ச்சி இருக்கின்றன. அதன் விளைவு, தேர்தலுக்கு பிந்திய அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, காங்கிரஸ் கட்சி மீண்டும் துளிர்த்திருக்கிறது.

இதே போன்று தான், மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் ஓரளவு முன்னேறி இருக்கிறது என்று கூறலாம். அந்த மாநிலத்தில், கட்சியின் அடிமட்ட பொறுப்புகள் உள்ளிட்ட அனைத்திலும் இருந்து அசோக் சவான் விலகிய போது அனைவரும் கொஞ்சம் மிரண்டனர் என்றே சொல்லலாம்.

அசோக் சவானுக்கு பதிலாக அந்த இடத்தில் பாலாசாகேப் த்ரோட்டை உட்கார வைத்தது காங்கிரஸ். லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, மிலிந்த் தியோரா விலக, அங்கு ஏக்நாத் கெய்க்வாடை நிறுத்தி, கட்சியை காப்பாற்றி இருக்கிறது காங்கிரஸ்.

துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி கிட்டத்தட்ட குறிப்பிட்ட சதவீதம் தொகுதிகளை வென்றிருக்கிறது. அக்கட்சியினருடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சித்து வருகிறது. காங்கிரசும் விடுவதாக இல்லை. இரு கட்சிகளும் முயற்சியால் அரியானாவில் யாருக்கு அரியணை என்பது முடிவாகாமல் இருக்கிறது.

இந்த இரு மாநில அரசியல் நடவடிக்கைகள் வழியாக, காங்கிரஸ் மீண்டும் வலுவான நிலையை நோக்கி முன்னேற தொடங்கி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி இருக்கின்றனர்.