பெங்களூரு

நாளை மாலை நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என பாஜகவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

காங்கிரஸ் – மஜத மற்றும் இரு சுயேச்சைகள் இணந்து 117 பேர் ஆதரவை சுட்டிக்காட்டி ஆட்சி அமைக்க மஜத கவர்னருக்கு கடிதம் அனுப்பியது.  ஆனால் கவர்னர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து எடியூரப்பா பதவி ஏற்றார்.  உச்சநீதிமன்றத்தில் தொடுக்கபட்ட வழக்கில் பாஜக நாளை மாலை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், “கர்நாடக ஆளுநர் செய்தது தவறானது.    காங்கிரஸ் – மஜதவுக்கு 117 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.  இப்போதே வேண்டுமானாலும் இந்த கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளது.  ஆனால் ஆளுநர் பாஜகவுக்கு 15 நாள் அவகாசம் அளித்தது கண்டனத்துக்குரியது.

இதுவரை எந்த அரசுக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்ததில்லை.  அவ்வாறு நீதிக்கு புறம்பான ஒரு அவகாசத்தை ஆளுநர் அளித்துள்ளார்.  ஆனால் உச்சநீதிமன்றம் நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதியை நிலை நாட்டி உள்ளது” என கூறி உள்ளார்.