வெலிங்டன்

நியுஜிலாந்து நாட்டில் துப்பாக்கி சுடும் உரிமம் பெறும் விதிகள் கடுமையாக்கப்படும் என அந்நாட்டு பிர்தம்ர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்

நியுஜிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 49 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்தியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரண்டன் டாரண்ட் என்னும் 28 வயது இளைஞர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரிடமிருந்து விதம் விதமான துப்பாக்கிகளும் அதற்கான தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 2017 ஆம் ஆண்டு நியுஜிலாந்தில் இவர் துப்பாக்கி சுடும் உரிமம் பெற்றுள்ளார். அத்துடன் இவர் இந்த மாதம் ஐந்து வகையான துப்பாக்கிகளை வாங்கி  அந்த துப்பாக்கிகளின் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளார்.  தாக்குதல் நடந்த கிறிஸ்ட்சர்ச் நகருக்கு வெலிங்டனில் உள்ள நியுஜிலாந்து பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் சென்றுள்ளார்.   அவர் கிறிஸ்ட்சர்ச் செல்லும் முன்பு  செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஜெசிந்தா, “ஒரு தனிப்பட்ட மனிதரால் துப்பாக்கி சுடும் உரிமம் எளிதாக பெறப்பட்டுள்ளது. அத்துடன் தடையின்றி அவரால் ஆயுதங்கள் வாங்க முடிந்துள்ளது. இது மறுக்க முடியாத உண்மை. மக்கள் அதனால் நாட்டில் பல மாறுதல்களை எதிர்பார்க்கிறார்கள். எனக்கு அதை செய்ய வேண்டிய கடமை உள்ளது. நான் துப்பாக்கி சுடும் உரிமம் பெறும் சட்டத்தை மாற்றி கடுமையாக்க உள்ளேன்.

இந்த தாக்குதலில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்ட மூவர் மீதும் எந்த ஒரு குற்றச்சாட்டும் இது வரை பதியப்படவில்லை. மற்றும் புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் இவர்கள் இல்லை. அது மட்டுமின்றி அவர் எந்த ஒரு மதம் இனம் குறித்த எந்த ஒரு தவறான தகவலோ செய்தியோ எந்த ஒரு வலைதளத்திலும் பதியவில்லை.” என தெரிவித்துள்ளார்.