தேசிய ஊரடங்கால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் பல தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி நேரடியாக தங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட நெட்ஃபிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட தளங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் சில படங்களின் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது . பல படங்களை வெளியிட்டும் வருகிறது .

தற்போது இந்திய விமானப் படையில் விமானியாக இருந்த குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 24-ம் தேதி அன்று அரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.

நெட்ஃப்ளிக்ஸ் தரப்பு, தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தைப் பற்றிய ஒரு காணொலியைப் பகிர்ந்து, விரைவில் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று பகிர்ந்துள்ளது.