ஈரான்: ராணுவ அணிவகுப்பின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு

--

ஈரான் ராணுவ அணிவகுப்பில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

iran

ஈரானில் எண்ணெய் வளம் அதிகம் உள்ள மாகாணமாக குசேஸ்தான் திகழ்கிறது. சனிக்கிழமை இம்மாகாணத்தில் உள்ள அஹ்வாஸ் நகரில் ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு துப்பாக்கி ஏந்தியபடி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து ஈரான் ஊடகம் தெரிவிக்கையில், “ ஈரானில் எண்ணெய் வளம் அதிகம் உள்ள மாகாணங்களில் குசேஸ்தான் மாகாணமும் ஒன்று. இங்கு அரபு பிரிவினை வாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வழக்கம். இந்நிலையில் சனிக்கிழமையன்று அஹ்வாஸ் நகரத்தில் உள்ள ராணுவ அலுவலகத்தில் ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கிய இரண்டு நபர்கள் துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவர் “ என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்களை ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இத்தகைய செயலை ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் நிகழ்த்தி இருக்கலாம் என்று ஈரான் உளவுத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

கடந்த வருடம் ஈரான் நாடாளுமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சமீபத்தில் ஈரானின் எண்னேய் நிறுவனம் ஒன்றில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.