பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து ஐவரை சுட்டுக் கொன்ற அமெரிக்கர்

மேரிலாண்ட்

மெரிக்காவில் ஒரு பத்திரிகை அலுவகத்துக்குள் நுழைந்து ஐந்து பேரை ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

அமெரிக்காவில் மேரிலாண்டில் இருந்து வெளிவரும் பத்திரிகை கேபிடல் கெஜட் ஆகும்.   இந்தப் பத்திரிகையில் கடந்த 2012 ஆம் வருடம் வந்த செய்தியை எதிர்த்து ஜரோட் ரமோஸ் என்பவர் மான நஷ்ட வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.  அந்த செய்தியில் முகநூல் மூலம் ஜரோட் ரமோஸ் ஒரு பெண்ணை துன்புறுத்தியதாக கூறப்பட்டிருந்தது.  அந்த செய்தியை அப்போதைய பத்திரிகை ஆசிரியர் தாமஸ் வெளியிட்டதாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கடந்த 2015 ஆம் வருடம் அந்த வழக்கில் பத்திரிகை ஆசிரியருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.   இதற்கு ரமோஸ் செய்த மேல் முறையிட்டிலும் பத்திரிகை ஆசிரியருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப் பட்டது.   இதனால் ஆத்திரம் அடைந்த ரமோஸ்  அந்த பத்திரிகையில் பணி புரிவோரைக் கொல்ல திட்டமிட்டார்.

அதை ஒட்டி அவர் பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்து கண்ணாடிக் கதவு வழியாக உள்ளே இருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இந்த துப்பாக்கி சூட்டில் பத்திரிகையில் உதவி ஆசிரியர் ராப் ஹியாசென், மற்றும் பத்திரிகை ஊழியர்களான வெண்டி விண்டர்ச், ரபெக்கா ஸ்மித், ஜெரால்ட் பிஸ்ச்மென் மற்றும் ஜான் மெக்கன்மரோ ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர்.   கொலையாளி அருகே கீழே இருந்த துப்பாக்கியை கைப்பற்றி கொலையாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   இந்தக் கொலையில் வேறு யாரும் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.