குருமூர்த்தி நாவை அடக்கிப் பேச வேண்டும்! அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை,

ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றிபெற்றதற்கு, ஆட்சியாளர்கள் ஆண்மையற்றவர்கள் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருந்தார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, குருமூர்த்தி நாவை அடக்கி பேச வேண்டும் என்று எச்சரித்தார்.

குருமூர்த்தியின் ஆண்மையற்றவர்கள் என்ற பதிவு  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து  பதில் அளித்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்திதான் ஆண்மையற்றவர் என்றும், படித்த முட்டாள் என்றும் நேற்று சரமாரியாக பதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ஆடிட்டர் குருமூர்த்தி நாவை அடக்கி பேச வேண்டும் என்றும், அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் குருமூர்த்தி தலையிடக் கூடாது என்றும்  கூறியுள்ளார்.

அதற்கு பதில் அளித்த குருமூர்த்தி,   நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப்பேச்சுக்கு நான் பதில் தெருப்பேச்சில் நான் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன் என அமைச்சருக்கு விளக்கமளித்தார்.

இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தியின் விளக்கத்துக்கு பதில் அளித்தார்.அப்போது,  “புறம்போக்கு” நிலம் என்பதை புறம்போக்கு என தனியாக சொன்னால் கோபம் வருமா? வராதா? என்றும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பத்திரிகையாளர் என்ற பண்பு இருக்கும் என நம்புகிறேன் என்று தனது பேட்டியில் வித்தியாசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

குருமூர்த்தி நாவை அடக்கிப் பேச வேண்டும். இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டால், அதிமுகவின் எதிர்ப்புக்கு நிச்சயமாக பதில் சொல்லியாக வேண்டும். விளம்பரத்துக்காக குருமூர்த்தி பேசி வருகிறார். அதிமுகவை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது.

குருமூர்த்தி போன்றவர்கள்,அதிமுகவை குற்றம் சாட்டுவது எங்களுக்கு வேதனையாக உள்ளது. அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் குருமூர்த்தி தலையிடக் கூடாது என்றார்.

மேலும், டிடிவி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,   ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், டிடிவி தினகரன் அனுதாபத்தால் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற  வெற்றி தற்காலிகமானதுதான் என்றும், அதிமுக கொடுத்த நெருக்கடியால்தான் தினகரனுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் கூறினார்.

மேலும்,  ஆர்.கே.நகரில், திமுகவை டெபாசிட் இழக்க செய்த ஆர்.கே.நகர் மக்களுக்கு வாழ்த்துக்கள் என்றும்,

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குறித்து, மு.க. அழகிரி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அழகிரியின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின்தான் பதிலளிக்க வேண்டும் என்றும் அமைச்சர்  கூறினார்.