குருமூர்த்தி “அப்படி” சொல்லியிருக்க மாட்டார்!: கே.பி.முனுசாமி

சென்னை,

ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஆகியோரை ஆண்மையற்ற பேடிகள் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்திருக்க மாட்டார் என்று ஓ.பி.எஸ். ஆதரவாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இவரை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்த அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மிகக் குறைவான வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

டிடிவி தினகரனின் வெற்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சிஅலையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் இது குறித்து விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், டிடிவி தினகரனின் வெற்றியை தடுக்காத ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். ஆகியோர் ஆண்மையற்ற பேடிகள். அவர்களுக்கு லஞ்சம் வாங்குவதும், காலில் விழுவதும்தான் தெரியும் என்று துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரும், ஓ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளருமான கே.பி.முனுசாமி, “அப்படி குருமூர்த்தி தெரிவித்திருந்தால் தவறு. அவர் ஒரு பத்திரிகை ஆசிரியர். அவர் அப்படி பேசியிருக்க மாட்டார்” என்று தெரிவித்தார்.

குருமூரத்தியின் குறிப்பிட்ட ட்விட், தற்போது சமூகவலைதளங்களான வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் வைரலாகி வருகிறது. இணைய இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் இது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்த நிலையில், “குருமூர்த்தி அப்படி சொல்லியிருந்தால் தவறு.. ஆனால் சொல்லியிருக்க மாட்டார்” என்று கேபி முனுசாமி தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.