குருதாஸ் காமத் மறைவு: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல்

டில்லி:

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான குருதாஸ் காமத் இன்று காலை காலமானார். அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான  குருதாஸ் காமத்துக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  இதையறிந்த அவரது  கார் டிரைவர் அவரை டில்லி  சாணக்யபுரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.

குருதாஸ் காமத் மறைவு குறித்து கேள்விப்பட்டதும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உள்பட காங்கிரஸ் தலைவர்கள்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர்  இரங்கல் செய்தியில்,  ‘குருதாஸ் காமத் மறைவு காங்கிரஸ் குடும்பத்திற்கு விழுந்த பெரிய அடி. மும்பையில் காங்கிரசை கட்டமைக்க உதவிய காமத், அனைவராலும் மதிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். இந்த துயரம் நிறைந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என  பதிவிட்டு உள்ளார்.

காமத் மறைக்கு  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பா.ஜ.க. எம்பி கிரித் சோமையா, சிவசேனா எம்எல்ஏ மனிஷா காயண்டே உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.