சட்டமன்றத்திற்குள் திமுக குட்கா எடுத்துச்சென்ற விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு

சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காசட்டமன்றத்திற்குள் எடுத்துச்சென்றது தொடர்பாக 2வது முறையாகவும் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் மனுத்தாக்கல் செய்ய சட்டமன்ற உரிமை குழு தலைவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில், தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெற்றுவதை, சுட்டிக்காட்டும் வகையில், கடந்த 2017ஆம்  ஆண்டு சட்டமன்றத்திற்குள் திமுக எம்எல்ஏக்கள் எடுத்துச்சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக  திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவை உரிமை குழு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நோட்டீசில் அ தவறு உள்ளதாக கூறி அதனை ரத்து செய்ததுடன், இதில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால், மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி, ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த  நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, குட்காவை காண்பித்தது உரிமை மீறல் இல்லை என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக்காட்டி திமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இது தொடர்பாக சபாநாயகர், சட்டமன்ற செயலாளர், உரிமை குழு ஆகியோர் அக்டோபர் 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பேரவைச் செயலாளர், உரிமை மீறல் குழு தலைவர் சார்பில்  மேல் முறையீடு செய்தது.  மனுவில்,   நோட்டீஸ்க்கு  விதித்த இடைக்காலத் தடையை நீக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் வலியுறுத்தப்பட்டது.

.இந்த வழக்கின் விசாரணை  சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்பொழுது இரண்டாவது நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.மேலும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏ-க்கள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை  அன்றைய தினம் ஒத்திவைத்து நீதிமன்றம்.

இந்த நிலையில்,உரிமை குழுவின் நோட்டீசுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய  சட்டசபை உரிமைக் குழு தலைவர் முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் மனுத்தாக்கல் செய்யப்படும் என்றும் கோட்டை  வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.