Random image

சூடு பிடித்துள்ள குட்கா விவகாரம்? மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் திடீர் ஆலோசனை

சென்னை:

மிழகத்தில் குட்கா முறைகேடு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மூத்த அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் இந்த அவசர திடீர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முதல்வருடன்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, உள்பட சிலர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழகத்தில் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் குட்கா முறைகேடு விவகாரமும் சூடு பிடித்து உள்ளது. சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே குட்கா முறைகேடு தொடர்பாக மாதவராவ் உள்பட 5 பேரை கைது செய்து, காவலில் கடந்த இரண்டு நாட்களாக அதிரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாதவராவின் உறவினர்கள் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் என பலரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள், முறைகேட்டுக்கான ஆவனங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இன்று மாதவராவை குடோனுக்கு அழைத்துச்சென்றும் விசாரித்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மூத்த அமைச்சர்களை அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால், அரசு தரப்பில் இருந்து,  எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்துவது, அதற்கான ஏற்பாடுகள், விருந்தினர்களை அழைப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும்,  பெட்ரோல் டீசல் விலை உயர்வு, குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன.