Random image

குட்கா விவகாரம்: முன்னாள் காவல்ஆணையர் ஜார்ஜ் வீட்டில் 2வது நாளாக சோதனை

சென்னை:

குட்கா முறைகேடு விவகாரத்தில் சென்னை மாநகர  முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் இன்று 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட குட்காவை, தடையை மீறி தமிழகத்தில் விற்பனை செய்ய லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள், குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடுகள் உள்பட சுமார் 40 இடங்களில் நேற்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

நேற்று பல இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில் இன்று 2வது நாளாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு குட்கா ஆலை அதிபர் மாதவராவின் குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனை யில் சிக்கிய டைரியில், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள், சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், சுமார் 35 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை நொளம்பூரிலுள்ள முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டனர். இதேபோன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, இதேபோல பாண்டிச்சேரி கர்நாடக மாநிலம் பெங்களூரு, மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட 40 இடங்களில் சோதனை நடந்தது. அதன்படி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத் உள்ளிட்ட பெரும்புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.

இதற்குமுன், கடந்த 2017ஆம் ஆண்டு விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர். தற்போது குட்கா முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சோதனை நடத்திய அதிகாரிகள், லஞ்ச புகார் பற்றியும் விசாரித்ததாக கூறப்படுகிறது. சென்னை முகப்பேரில் உள்ள டிஜிபி ராஜேந்திரன் வீட்டிலும் இச்சோதனை நடைபெற்றது.

சென்னை தியாகராய நகரில் உள்ள ரயில்வே டிஎஸ்பி மன்னர் மன்னன் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோன்று மேலும் சில முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஜார்ஜ் வீட்டில் இன்று 2வது நாளாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

குட்காக ஊழல் தொடர்பாக ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 22ந்தேதி  தமிழக உணவு பாதுகாப்புதுறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.