குட்கா முறைகேடு வழக்கு: மாதவராவ் ஜாமின் மனு அக்.3ந்தேதிக்கு ஒத்திவைப்பு

 சென்னை:

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உள்பட கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் சார்பில்  ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை அடுத்த மாதம் 3ந்தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற  பொருட்கள் விற்பனைக்கு  தடை செய்யப்பட்டன. ஆனால், தடையை மீறி திருட்டுத்தனமாக விற்பனை செய்ய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்பட காவல்துறை அதிகாரிகளும் லஞ்சம் வாங்கிக்கொண்டு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான விசாரணையை தற்போது  சிபிஐ விசாரித்து வரும் நிலையில், குட்கா குடோன் உரிமையாளர்  மாதவராவ், அவரது இரு பங்குதாரர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவர்களின் வீடுகள், அலுவலகங்கள், குடோன்கள், மற்றும் முக்கிய உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாதவராவ் , சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா  ஆகிய 3 பேர்  ஜாமின் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். மனுவை விசாரித்த நீதிபதி  சிபிஐ பதில் அளிக்க உத்தவிட்டு வழக்கு அக்.3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.