குட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கர் சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகிறார்

சென்னை:

குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார்.

கடந்த சில நாட்களாக அவரது உதவியாளர் சரவணன் ஆஜரான நிலையில், இன்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலைக்குள் சாஸ்திரி பவன் அலுவலகத்தில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

அதுபோல,முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவையும் விசாரணைக்கு  ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பிஉள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வதற்கு சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்ததாக கூறப்பட்டது. லஞ்சப்பணம்,  தமிழக அமைச்சர்கள், காவல் துறை ஆய்வாளர்கள், மற்றும் உயர் அதிகாரிகளுக்கு  அளிக்கப் பட்டதாக தகவல் வெளியாகின. இதுதொடர்பாக நடைபெற்று வழக்கை உயர்நீதி மன்றம் சிபிஐக்கு மாற்றியது.

இதற்கிடையில், கடந்த  2016ம் ஆண்டு குட்கா தயாரிப்பாளரான மாதவராவ் வீடு மற்றும் குடோன் களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி முக்கிய டைரி ஒன்றினை கைப்பற்றினர்.  அதில் தமிழகத்தில் சட்டவிரோதமாக குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்ய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் லஞ்சம் பெற்ற தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த வழக்கு தொடர்பாக குட்கா ஆலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, இவர்களுடன் மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் மற்றும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், சிவக்குமார் ஆகியோரை மத்தியப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், குட்கா ஊழல் வழக்கில் நேரில் ஆஜராகச் சொல்லி விஜயபாஸ்கர் மற்றும் அவரின் உதவியாளர் சரவணனுக்கும்  சிபிஐ சம்மன் விடுவித்திருந்தது. இதையடுத்து சரவணன்,  கடந்த 7ம் தேதி  முதல் தொடர்ந்து 3 நாட்கள் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள  மத்திய புலனாய்வுத் துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார். அவரிடம் 10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அதிமுக ஆட்சியின் போது வணிகவரித்துறை அமைச்சராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: CBI investigation, CBI investigation appear, Gutka scam:, Minister Vijayabaskar, அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா ஊழல், சிபிஐ விசாரணை, முன்னாள் அமைச்சர் ரமணா, விஜயபாஸ்கர் இன்று ஆஜர், விஜயபாஸ்கர் உதவியாளர், விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணன்
-=-