குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்தான் பதவி நீக்கம்: ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதில்

சென்னை:

குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஸ்டாலின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்தான் பதவிநீக்கம் பற்றி பேசமுடியும் என்று கூறினார்.

ரசு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலாக்களை தமிழகம் முழுவதும் திருட்டுத்தனமாக விற்பனை செய்ய மாதாமாதம் பணம் பெற்றுக்கொண்டு  அனுமதி அளித்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை கமிஷனர் ஜார்ஜ், டிஜிபி ராஜேந்திரன் உள்பட காவல்துறை, சுகாதாரத்துறை உயர்அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த முறைகேட்டில் ரூ.40 கோடி ஊழல் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதை உறுதி செய்யும் வகையில், குட்கா விவகாரம் குறித்து அப்போதைய டி.ஜி.பி ராஜேந்திரன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசியக் கடிதம் ஒன்று சசிகலா அறையில் இருந்து  கைப்பற்றப்பட்டதாக  வருமான வரித்துறை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து இருந்தது.

இதன் காரணமாக குட்கா ஊழல் முறைகேடு வழக்கு மேலும் சிக்கலானது. இதையடுத்து, இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், விசாரணையை சிபிஐ வசம் மாற்றி உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கை தொடர்ந்த திமுக சார்பில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இந்த முறைகேட்டில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  குட்கா வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்தான் பதவிநீக்கம் பற்றி பேசமுடியும் என்று ஸ்டாலினுக்கு  பதில் அளித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் சுகாதாரத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இன்றைய சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பின் விவரங்களை முழுமையாக படித்துப் பார்த்த பிறகே எதுவும் கூறமுடியும் என்றார்.

மேம், டிடிவிதினகரன் திவாகரன் மோதல் குறித்தகேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், கத்தரிக்காய் முற்றி சந்தைக்கு வந்துள்ளதாக கூறினார். . ஜெயலலிதா தம்மை ஒதுக்கி வைத்த உண்மையை தினகரனே இப்போது ஒப்புக்கொண்டிருப்பதாகவும் ஜெயக்குமார் கூறினார்.