குட்கா ஊழல்:   அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி விசாரணை

குட்கா ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.40 கோடி குட்கா ஊழல் வழக்கை டில்லி சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் குட்கா வியாபாரியும், தொழில் அதிபருமான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில்முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். .

இந்த ஊழல் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும்  சில காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் வீடுகள் உள்பட 35 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. பிறகு காவல்துறை உயர் அதிகாரி  ஜெயக்குமார் மற்றும் சம்பத் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. விசாரித்தது.   இருவரிடமும் தலா இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் சி.பி.ஐ. போலீசார் குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக திடீரென்று கடந்த மாதம் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் மீது மட்டும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

முதல்கட்ட குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெறவில்லை. ஆனால் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், தேவைப்பட்டால் இரண்டாவது  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் சி.பி.ஐ. போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் டில்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து முகாமிட்டனர். மேலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சி.பி.ஐ. போலீசார் சம்மன் அனுப்பினர். அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

அடுத்து குட்கா ஊழல் வழக்கில் ஆஜராக  அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.

அதன்படி இன்று சென்னை சிபிஐ அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இடையில் ரெஸ்ட் ரூம் செல்ல அனுமதி கேட்டு விஜயபாஸ்கர் சென்றார். அப்போது யாரோ அவரை படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அது இப்போது வைரலாகிவருகிறது.

 

கார்ட்டூன் கேலரி