கமதாபாத்

குஜராத் குடிநீர் மற்றும் வடிநீர் வாரியத்தில் கோடிக்கணக்கான அளவில் மோசடி நடந்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சுரேஷ் மேத்தா ஜனநாயகத்தை காப்போம் என்னும் குஜராத் அறிவுஜீவிகளின் அமைப்பில் பங்கு பெற்றுள்ளார். அந்த அமைப்பு குஜராத் மாநிலத்தின் அரசு துறைகளின் வருடாந்திர கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றது. அவ்வகையில் கடந்த 2017-18 வருடத்துக்கான குஜராத் குடிநீர் மற்றும் வடிகால் வாரிய ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையை ஆய்வு செய்தது.

இந்த ஆய்வு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை அன்று சட்டப்பேரவைக்கு அளிக்கப்பட்டது. இது குறித்து சுரேஷ் மேத்தா பத்திரிகையாளர்களிடம், ”குஜராத் நீர்வளத் துறை நிறுவனம் ரூ.502 கோடி அளவுக்கு குஜராத் குடிநீர் வாரியத்துக்கு பில் அனுப்பி இருந்தது. கடந்த 2017-18 ஆம் வருடத்துக்கான இந்த தொகையில் ரூ. 163 கோடியை மட்டும் குடிநீர் வாரியம் ஒப்புதல் அளித்து அந்த பணத்தை தர ஒப்புக் கொண்டுள்ளது.

மீதமுள்ள ரூ.340 கோடிக்கான பில்கள் என்ன ஆனது? அதற்கு ஏன் குடிநீர் வாரியம் ஒப்புதல் அளிக்கவில்லை? அந்த நீர் வற்ற்ப் போய் விட்டதா அல்லது காற்றில் கரைந்து விட்டதா? இந்த முறைகேடு ஒரே வருடத்தில் நடந்துள்ளது. இதற்கு காரணம் குடிநீர் வாரியம் இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ள கணக்கு முறையை பின்பற்றாததே ஆகும். அது மட்டுமின்றி இந்த தணிக்கை அறிக்கை குடிநீர் வாரியத்தில் தேவையான எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததால் பல பிரிவுகளில் வேலைகள் நடக்கவில்லை என்பதையும் சுட்டுக் காட்டி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.