அமெரிக்காவில் எச்1பி விசா கட்டுப்பாடு மசோதா தாக்கல்: இந்தியர்களுக்கு பாதிப்பு

--

வாஷிங்டன்,

மெரிக்காவில் எச்1பி விசாவை கட்டுப்படுத்தும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதா காரணமாக இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக எச்1பி விசா நடைமுறைகளை கட்டுப்படுத்தும் புதிய மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அமெரிக்காவில் சில  நிறுவனங்கள்,  சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அங்குள்ள அமெரிக்கர் களை விலக்கிவிட்டு, வெளிநாட்டவர்களை  எச்1பி விசா நடைமுறைகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை குறைந்த சம்பளத்தில் பணியமர்த்தியுள்ளன.

இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகையிலும், வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் வகையில், அமெரிக்க செனட் சபையில் எச்1பி விசா சட்டதிருத்த மசோதா  இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி, எச்1பி விசா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, அமெரிக்க ஊழியர்களை அனுப்பிவிட்டு அந்த இடங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களை குறிப்பாக இந்திய ஊழியர்களை பணியமர்த்துவது கடினம் என தெரிகிறது.

இதற்கு முன்பு குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 60 ஆயிரம் டாலர்களாக இருந்தது. தற்போது 1 லட்சத்து 30ஆயிரம் டாலர்கள் என கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு பணியாளர்களை கட்டுப்படுத்தி, உள்நாட்டு அமெரிக்க பணியாளர்களை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவும் அவர்களுக்கு விசா கிடைப்பதையும் இந்த மசோதா உறுதி செய்வதாக அரசு தெரிவித்துள்ளது.

டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தபடி, அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மசோதாவினால், வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு  குறையும்.

குறிப்பாக,  இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.