பெங்களூரு: நரேந்திர மோடி மீண்டும் வெற்றிபெற்று பிரதமராகிவிட்டால், அரசியலிலிருந்தே விலகிவிடுவதாக சவால் விட்டுள்ளார் கர்நாடக அரசின் பொதுப்பணித் துறை அமைச்சரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான எச்.டி.ரேவண்ணா.

முன்னாள் பிரதமர் தேவகெளடாவின் இரண்டாவது மகனும், தற்போதைய கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியின் அண்ணனுமான ரேவண்ணா கூறியதாவது, “நரேந்திர மோடி மீண்டும் வாரணாசியில் வென்று பிரதமராகிவிட்டால், நான் அரசியலிலிருந்தே விலகி விடுகிறேன்.

மதவாத பாரதீய ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவே, காங்கிரஸ் கட்சியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைத்துள்ளோம். நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை காக்க விரும்புகிறோம். கடந்த 5 ஆண்டுகளில், விவசாயிகளுக்காக மோடி செய்துள்ள நன்மை என்று எதையும் குறிப்பிட முடியுமா?

கர்நாடகாவின் 15 லட்சம் விவசாயிகளை, பிரதம மந்திரியின் கிஸான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் சேர்க்கும்படி பட்டியல் அனுப்பினோம். ஆனால், அந்தப் பட்டியல் மத்திய அரசுக்கு வந்தடையவில்லை என மோடி பொய் சொல்கிறார்” என்றார்.

– மதுரை மாயாண்டி