சென்னை:

ர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தொடர்ந்து கூறி வரும், எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தொடர்ந்து அவதூறான  கருத்துக்களை தெரிவித்து வரும ஹெச்.ராஜா மீது அரசு வழக்கு தொடரும். ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் இழிவாக பேசி வருவதை ஏற்க முடியாது என்று கூறினார்.

சமீபகாலமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வருகிறார். நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழி குறித்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அதுபோல எஸ்.வி.சேகரும், பத்திரிகையாளர் கன்னத்தை கவர்னர் தட்டிய விவகாரத்திலும் தரம் தாழ்ந்த வகையில் பதிவு போட்டிருந்தார்.

இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் குதிதுள்ளனர். பாஜகவினரின் அத்துமீறிய, தரம் தாழ்ந்த பதிவுகள்  சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைபா் சைக்கோக்கள் என கூறியுள்ளார். மேலும், முதல்வர் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜா மீது அரசே வழக்கு தொடரும் எனவும், பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய எஸ்.வி.சேகர் மீது புகார் கொடுத்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு விளம்பரம் தேடுவதே வேலை என்றும்,  பேராசிரியை நிர்மலா தேவி  விவகாரத்தில், காவல்துறை உண்மை நிலையை வெளிக்கொண்டுவரும், யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறினார்.

மேலும், ஆளுநர் அமைத்துள்ள விசாரணை கமிஷன், சிபிசிஐடி விசாரணையை பாதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.