எச். ராஜா

நேற்று சென்னையில் நடந்த ஐ.பி.எல். எதிர்ப்பு போராட்டத்தை குறிப்பிட்டு நடிகர் சத்யராஜையும், போராட்டக்காரர்களையும் கிண்டலடித்திருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ்த்திரையுலகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடிகர் சத்யராஜ், போராட்டம் தொடரும் என்றும் ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் என்றும் பேசினார்.

இந்த நிலையில் காவிரி  மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும்  சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்தக் கூடாது என்று கோரியும் நேற்று சென்னையில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் கூட்டத்தினரை கலைக்க காவல்துறை தடியடி நடத்தியது. போராட்டத்தில் பங்குபெற்ற இயக்குநர் வெற்றிமாறன் உட்பட பலர், காவலர்களால் தாக்கப்பட்டனர். இதற்கிடையே காவல்துறையினரை நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டு பத்து பேர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம் என்றும் கேப்சன் எழுதி பதிவிட்டுள்ளார்   பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா.

அந்தப் புகைப்படத்தில் கறுப்புச் சட்டை அணிந்த போராட்டக்காரர் இருவர், தங்களது கைகளை கூப்பியப்படி காவலர்களிடம் மன்னிப்பு கேட்பது போல் உள்ளது.

“இப்படி மன்னிப்பு கேட்பவர்கள்தான் ராணுவமே வந்தாலும் அஞ்சாதவர்களா?” கோணத்தில் சத்யராஜையும், போராட்டக்காரர்களையும் கிண்டலடித்திருக்கிறார் எச்.ராஜா.