எச்.ராஜாவுக்கு ‘ரத்தக்கொதிப்பு’: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கோவை:
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு ரத்தக்கொதிப்பு… அவரை உடடினயாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டிரீட்மென்ட் கொடுங்கள் என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது காவல்துறை அதிகாரிகளிடம் கடுமையாக விவாதம் செய்த எச்.ராஜா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்ர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தையும் இழிவான வார்த்தையால் வசைபாடினார். அத்துடன் தமிழக டி.ஜி.பி. மற்றும் காவல்துறை குறித்தும் அநாகரிகமாக பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று கோவை வந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எச்- ராஜா கோபத்தில் ஏதேதோ பேசியதாக தெரிகிறது.. போலீசாரிடம் அவர் செய்த வாக்குவாதம் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் என்றார்.
மேலும், எப்போதும் டென்சனில் இருக்கும் ராஜாவுக்கு ரத்த கொதிப்பு இருக்கலாம் … அவரை உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிச் சென்று ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
எச்.ராஜாமீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசிய எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்விக்கு, எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவதற்கு முன்பாகவே ஜாமீன் பெற்றுவிட்டார் என்றும், ஜெயில் என்று ஒன்று இருந்தால் பெயில் என்று ஒன்று இருக்கத்தான் செய்யும் என்று ராஜேந்திர பாலாஜி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.