Random image

திண்டுக்கல் பாஜக பொதுக் கூட்ட மேடையில் ஹெச்.ராஜா….வைரலான புகைப்படம்

திண்டுக்கல்:

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசிய விவகாரத்தில் 4 நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவதூறாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. ஹெச்.ராஜா மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பிடிக்க 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, இச்சம்பவம் தொடர்பாக ஹெச்.ராஜா4 வாரத்துக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில் ஹெச்.ராஜா திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலை தளங்க்ளில் வைரலாகி வருகிறது.

அந்த கூட்டத்தில் ஹெச்.ராஜா தலைமறைவு எனும் செய்தி அடங்கிய செய்தித்தாளை மேடையில் ஒருவர் தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்கிறார். ஆனால், மேடையில் ஹெச்.ராஜா அமர்ந்திருக்கிறார். சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ள இந்த புகைப்படத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.