ஹபீஸ் சயீத்தின் இயக்கம் பயங்கரவாத அமைப்பு…பாகிஸ்தான் அறிவிப்பு!

இஸ்லாமாபாத்:

அமெரிக்கா மிரட்டலை தொடர்ந்து ஹபீஸ் சயீத்தின் ‘‘ஜமாத்-உத்-தவா’’ இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

மும்பை தாக்குதல் உள்பட பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ஹயீஸ் சயீது வீட்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். வெளியே வந்தவுடன் அரசியல் கட்சி தொடங்கி அதிபர் தேர்தலில் போட்டியிடபோவதாக அறிவித்தார்.

அது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதை தடுக்க பாகிஸ்தான் அரசை அமெரிக்கா நிர்பந்தம் செய்தது. பாகிஸ்தானும் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் ஹபீஸ் சயீத்தின் கட்சிக்கு அங்கிகாரம் வழங்க கூடாது என்று தெரிவித்தது. எனினும் கட்சி தொடங்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.

இதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டது. இந்த வகையில் 255 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,657 கோடி) ராணுவ நிதி உதவியை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தி வைத்தது. அத்துடன் 2017ம் நிதி ஆண்டுக்கான கூட்டணி ஆதரவு நிதியான 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,850 கோடி) நிதி உதவியும் சேர்த்து நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் கடும் அதிர்ச்சியடைந்தது.

இதைதொடர்ந்து ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இது குறித்த அரசு விளம்பரம் பாகிஸ்தான் பத்திரிக்கைகளில் உருது மற்றும் பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விளம்பரத்தில் தொண்டு நிறுவனங்கள் என அழைக்கப்படும் ஹபீஸ் சயீத் இயக்கங்கள் உள்பட தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதிஉதவி வழங்குபவர்கள் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்க்கொள்ள வேண்டும். கடுமையான அபராதம் விதிக்கப்படும். அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.

பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் ஜமாத்-உத்-தாவா, பலாக்-இ-இசானியாத், லஷ்கர்-இ-தொய்பா, மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட 72 இயக்கங்களை பட்டியலிடப்பட்டுள்ளது.