Random image

அரசு நிறுவனமான எச் ஏ எல் ரபேல் விமானங்களை தயாரிக்கும் திறமை கொண்டது : நிறுவன முன்னாள் தலைவர்

டில்லி

ரசு நிறுவனமான எச் ஏ எல் நிறுவனம் ரபேல் ரக விமானங்களை தயாரிக்கும் திறமை கொண்டது என அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் (எச் ஏ எல்) விமானக் கட்டுமானப் பணியை செய்து வருகிறது.  இந்நிறுவனத்தின்  தலைவராக இருந்தவர் சுவர்ண ராஜு.    இவர் இந்த மாதம் ஒன்றாம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.  இவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.   அப்போது ரபேல் போர் விமானங்கள் குறித்துப் பேசி உள்ளார்.

அவர், “எச் ஏ எல் நிறுவனம் ஏற்கனவே 25 டன்கள் எடை கொண்ட சுகோய் 30 என்னும் நான்காம் தலைமுறை போர் விமானத்தை தயாரித்துள்ளது   அவ்வாறு இருக்கும் போது ரபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்திய அரசு பிரெஞ்சு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.   இது தவறானது.  ரபேல் ரக போர் விமானங்களை தயாரிக்கும் திறமை எச் ஏ எல் நிறுவனத்துக்கு உள்ளது.

இந்த நிறுவனம் ஏற்கனவே பல போர் விமானங்களை மூலப் பொருள் கொள்முதல் செய்யும் நிலையில் இருந்து ஆரம்பித்து முழுமையாக செய்து முடித்துள்ளது.  நாங்கள் ஏற்கனவே சுமார் ஐந்து வருடம் முன்பே ரபேல் ரக விமானங்களை போன்ற போர் விமானங்களை தயாரித்துள்ளோம்.  நாங்கள் ரபேல் ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு அளிக்க வடிவமைப்பு உள்ளிட்ட பல வேலைகளை தொடங்கினோம்.   ஆனால் விலையை காரணம் காட்டி அப்போதைய அரசு எங்களுக்கு அந்த ஒப்பந்தத்தை அளிக்கவில்லை.

ஆனால் விலையை விட விமானத்தின் ஆயுட்காலத்தையும் கணக்கிட வேண்டும் என்பதை அரசு அதிகாரிகள் கருத்தில் கொள்ளவில்லை.   அதை கணக்கிடும்  போது நமது விமானங்கள் விலை மலிவானவைகள் ஆகும்.   அத்துடன் இவ்வாறு பெரிய விமானங்களை உள்நாட்டில் தயாரிக்கும் போது நமது தொழில் நுட்பம் மற்றும் கற்கும் திறன் அதிகரிக்கும்

ஆனால் தற்போது அதிக விலைக்கு அதே ரபேல் விமானங்களை அரசு வாங்க உள்ளதாக தெரிவிக்கிறது.  எனவே விலைக் குறைவு என்பது தற்போது சரி வராது.  தற்போதைய அரசு எச் ஏ எல் நிறுவனம் விமானம் தயாரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என கூறி வருகிறது.    தொழில் நுட்பத்தை முழுவதுமாக தெரிந்துக் கொள்ள கால தாமதம் ஆகும் என்பது உண்மை தான்.   ஆனால் அது முதல் ஓரிரு விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும்.   அடுத்தடுத்து தயாரிப்பு விரிவாக்கப்பட்டு அரசு நிர்ணயிக்கும் நேரத்தில் விமான தயாரிப்பை முடித்து எச் ஏ எல் நிறுவனம் அளித்து விடும்.

இது குறித்து ஏற்கனவே விவரங்களை எச் ஏ எல் நிறுவனம் மற்ற நிறுவனத்துடன் இணைந்து அளித்துள்ளது.   இந்த விவரங்களை அரசு வெளியிட மறுப்பது ஏன் என தெரியவில்லை.    இதை பொதுமக்களுக்கு அரசு அறிவித்தால் அவர்கள் உண்மையை அறிந்துக் கொள்வார்கள்.   அந்த விவரங்கள் மூலம் எச் ஏ எல் நிறுவனத்தால் ரபேல் ரக விமானங்களை தயாரிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிய வரும் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ரபேல் விமான ஒப்பந்தம் குறித்த புகாரை தினம் தோறும் தொடர்ந்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறி வருகிறது.  அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஊழல் இல்லை என அரசு பதில் அளித்த போதிலும் ஒப்பந்த விவரங்களை வெளியிட மறுத்து வருகிறது.  இந்த சமயத்தில் இந்திய அரசு நிறுவனத்துக்கு செல்ல வேண்டிய ஒப்பந்தம் வெளிநாட்டு நிறுவனத்துக்கு சென்றுள்ளது மற்றொரு சர்ச்சையை கிளப்பி உள்ளது.