Random image

தமிழகத்தின் சில பகுதிகளில் அரைமணி நேரம் மின்வெட்டு: அமைச்சர் தங்கமணி

சென்னை:

மிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். அதற்கு பதில் அளித்துள்ள தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, ஸ்டாலின் முதல்வராக முடியாத காரணத்தால் குற்றம் சாட்டி வருகிறார் என்றும், தமிழகத்தின் சில பகுதிகளில் அரை மணி நேரம் மின்வெட்டு இருப்பதாகவும் கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி,  மத்திய தொகுப்பில் இருந்து 4000 மெகாவாட் மின்சாரம் குறைந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும,காற்றாலை மின்உற்பத்தியும் திடீரென குறைந்துவிட்டதால் சில பகுதிகளில் அரை மணி நேரம் மின்வெட்டு உள்ளது என்றும் கூறினார்.

மத்திய மின் தொகுப்பில் இருந்து நமக்கு வரவேண்டிய 4 ஆயிரம் மெகாவாட் வராததாலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 1000 மெகாவாட் மின்உற்பத்தியில் நமக்கு 3 மாதமாக மின்சாரம் தரவில்லை. ஆனாலும் நீர்மின்நிலையம், அனல் மின்நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மின் உற்பத்தியை வைத்து நிலைமையை சமாளித்தோம்.

மேலும் வடசென்னையில் 2 அனல் மின்நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதில் வல்லூர் அனல் மின்நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின்உற்பத்தி நாளை மீண்டும் தொடங்குகிறது. இதேபோல் 210 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது 2 நாளில் சரி செய்யப்பட்டுவிடும்.

நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி நிறுத்தப்படவில்லை என்ற அமைச்சர், 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் மழை காரணமாக அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வருவதில் சிரமம் ஏற்படுவது உண்மைதான். ஆனாலும் நம்மிடம் தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது என்றார்.

தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து, இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் இன்னும் 15 நாட்களில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு அனல் மின்நிலையங்களுக்கு அனுப்பப்படும். எனவே இப்போது மின் வெட்டு இல்லை. இதுதான் உண்மை.

மின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக ஆட்சி தான் என்ற  அமைச்சர் தங்கமணி, நிலக்கரி ஊழல் என்ற குற்றச் சாட்டு பொய்யானது என்றும், திமுக ஆட்சியில் தான் நிலக்கரி அதிக விலையில் வாங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் ஸ்டாலினால் முதலமைச்சராக முடியவில்லை என்ற காரணத்தால் தமிழக அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.