மகாராஷ்டிராவில்  பாதி ஜெயில் காலி..

கொரோனா வைரஸ் மகாராஷ்டிர மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது.

சிறைக்கைதிகள் மற்றும் காவலர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு மத்தியச் சிறையில் 185 கைதிகளை கொரோனா பாதித்துள்ளது. 36 சிறை ஊழியர்களையும் அந்த வைரஸ் தொற்றியுள்ளது.

இதனால் மிரட்சி அடைந்துள்ள மகாராஷ்டிர அரசு, கைதிகளைத் தற்காலிகமாக வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

அந்த மாநிலத்தில் மொத்தம் 35 ஆயிரம் கைதிகள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பாதிப் பேரை –அதாவது 17 ஆயிரம் கைதிகளை ’பரோல்’ கொடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப் போவதாக அந்த மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

‘’ நெரிசல் மிகுந்த சிறைகளில் அவர்கள் தொடர்ந்து அடைக்கப்பட்டிருந்தால் நிலைமை சிக்கலாகி விடும், எனவே பரோலில் விடுதலை செய்கிறோம்’’ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

விடுவிக்கப்படுவோரில், விசாரணை கைதிகள், மற்றும் 7  ஆண்டுகள் வரை  தண்டனை விதிக்கப்பட்டவர்கள்  அடங்குவர்.

பாலியல் குற்றவாளிகள், வங்கி மற்றும் நிதி மோசடி செய்தோர், தடா கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள்.

– எழுமலை வெங்கடேசன்