நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை:
செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறையாததால் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தம் காரணமாவே தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று பரவா வண்ணம் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நாடு முழுவதும் 3,843 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. ஜேஇஇ தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த வாரம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.