புதுடெல்லி: 2019- 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டிற்கான ஆவணங்களை அச்சிடும் பணி தொடங்குவதை குறிக்கும் ஹல்வா திருவிழா மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த 1940ம் ஆண்டுகளில் இருந்து, மத்திய பட்ஜெட் அமர்வு தொடங்கும் சமயத்தில் இந்த ஹல்வா திருவிழா சம்பிரதாயம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கமான சம்பிரதாய நிகழ்வு என்பது, பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை அச்சடிக்கும் பணி தொடங்குவதையும் குறிக்கிறது. நீண்டகாலத்திற்கு பின்னர், மத்திய பட்ஜெட்டை ஒரு பெண் தாக்கல் செய்யப்போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், இந்த ஹல்வா திருவிழா குறித்த விமர்சனங்களும் டிவிட்டரில் எழுந்துள்ளன. காலங்காலமாக தேவையில்லாமல் பின்பற்றப்படும் ஒரு வெற்று சம்பிரதாயம் என்றும், இதைக் கைவிட வேண்டுமென்றும் சிலர் கருத்துக் கூறியுள்ளனர்.

சிலரோ, நமது பொருளாதாரத்தையே ஹல்வா போல் கிண்டிவிட்டது இந்த திறமையற்ற அரசு என்றும் சாடியுள்ளனர்.