இஸ்தான்புல்: பிரிட்டன் கார்பந்தய வீரரான ஹாமில்டன், மொத்தம் 7 உலக சாம்பியன் பட்டங்களை வென்று, ஜெர்மன் முன்னாள் வீரர் மைக்கேல் ஷுமேக்கரின் சாதனையை சமன்செய்துள்ளார்.

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற கிராண்ட்பிரிக்ஸ் பார்முலா 1 கார்பந்தயத்தில், சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் இந்த சாதனையை அவர் புரிந்துள்ளார். இப்போட்டி, மழையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பாக, ஷுமேக்கர் இந்த சாதனையை நிகழ்த்தியபோது, இதை யாரும் அவ்வளவு எளிதாக சமன்செய்யவோ அல்லது முறியடிக்கவோ முடியாது என்றே கருதப்பட்டது. ஆனால், தற்போது அந்த சாதனை சமன்செய்யப்பட்டுள்ளது.

இந்த வெற்றிக்குப் பிறகு, மிகவும் உணர்ச்சிவயப்பட்டு காணப்பட்டார் ஹாமில்டன். அவர் கண்களில் வடிந்த நீரை துடைத்துக்கொண்டார்.

ஹாமில்டனின் கணக்கில், மொத்தமாக 94 வெற்றிகள், 97 போல்கள் மற்றும் 163 போடியம்கள் உள்ளன. இந்த சாதனையை வேறு எவரும் செய்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஹாமில்டனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.