பிலிப்பயன்ஸில், சகடா என்ற ஊரில் வாழும் மக்கள் ஒரு வினோதமான அடக்கம் செய்யும் முறையை பின்பற்றுகின்றனர். அவர்கள் குடும்பங்களில், இறந்தவர்களை சவப்பெட்டிகளில் வைத்து அந்த பெட்டிகளை குன்றின் சுவர்களில் ஆணி அடித்தோ, கட்டியோ தொங்க விடுகின்றனர். சீனா, இந்தோனேஷியா மற்றும் பிலிபைன்ஸ் போன்ற பல்வேறு இடங்களில் இந்த கலாச்சாரத்தை பல நூற்றாண்டுகளாக பின்பற்றுகின்றனர். இது போன்ற தொங்கும் சவப்பெட்டிகள் மூலம், தங்களைப் பிரிந்தவர்கள் சொர்கத்திற்கு மிக அருகில் இருப்பார்கள் என்றும், தங்களின் இளைய தலைமுறையினர் இந்த சடங்கினால் நன்மை அடைவார்கள் என்றும் நம்புகின்றனர்.

எக்கோ பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் மலைச்சிகரத்தில் அமைத்துள்ள லூமியாங் குகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகளில் பழைமை வாய்ந்த இகோரோட் மூதாதையர் தங்களின் இறந்தவர்களை வைத்துள்ளனர். அவர்களை தங்கள் குடும்ப வண்ணங்களாலும், ஆடைகளாலும் அலங்கரித்து, உடுத்தி அடக்கம் செய்கின்றனர். தங்கள் இளைய தலைமுறையினறால் அடையாளம் காணப்படவே இவ்வாறு செய்கின்றனர். பூமியின் அடியில் தோன்றும் தண்ணீர் உடல்களில் புகுந்து உடலை அழுகச் செய்வதால், இகோரோட் பழங்குடியினர் தங்கள் உடல்களை மண்ணில் புதைப்பதில்லை.

2000 ஆண்டுகளாக பின்பற்றி வரும் பழக்கமாக இருந்தாலும், இந்த மரபு மெதுவாக அழிந்து வருகிறது. ஏனெனில், இளைய தலைமுறையினர் நவீன வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.