அனுமன் ஜெயந்தி: 100008 வடைமாலையுடன் ஆசி வழங்கும் நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல்:

ன்று அனுமன் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரசித்தி பெற்ற நாமக்கல் அனுமன் கோவிலில் அனுமனுக்கு 1லட்சத்து 8 வடை மாலை அணிவித்து விசேஷ பூசைகள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய தினத்தன்று ‘ ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை ஜெபித்து ஆஞ்சநேயனின் ஆசிகள் பெறுவோம்.

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். அன்றைய நாளே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள  ஆஞ்சநேயர் கோவில்களில் பிரசித்தி பெற்றது நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவில். இங்குள்ள 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் செதுக்கப்பட்டது. இங்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, 1 லட்சத்து எட்டு வடைமாலை சாற்றி பூஜை நடைபெறுகிறது.

இன்று அதிகாலை 5 மணிக்கு  பால், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு, குங்குமம், களபம், மஞ்சள், நல்லெண்ணெய், பன்னீர், சந்தனம், மாதுளம்சாறு, எலுமிச்சம் சாறு, கரும்புச்சாறு என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அபிசேக ஆராதனைகள் நடைபெற்ற முடிந்ததும்  ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாமக்கல்லை முற்றுகையிட்டு உள்ளனர். அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோது கிறது.  நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் மாலையில் புஷ்பாபிஷேகமும் நடைபெறுகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் பணிக்காக வடைகள் தயாரிக்கும் பணி கடந்த சில நாட்களாகவே  அங்குள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில்நடைபெற்று வந்தது.  ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 32 பேர் வடைகளை தயாரித்து வந்தனர். இதற்காக 2,250 கிலோ உளுந்தம் பருப்பு பயன்படுத்தப்படுகிறது. மேலும் 650 கிலோ நல்ல எண்ணெய், 35 கிலோ மிளகு, சீரகம், உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

அதுபோல குமரி மாவட்டம்   சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள 18 அடி ஆஞ்சநேயருக்கும் இன்று சிறப்பான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகர் மற்றும் தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், பகல் 11 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை நடக்கிறது. 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.

ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.  திதிகளில் புண்ணியமான திதி அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம்.

இன்றைய தினத்தன்று ‘ ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே, வாயுபுத்ராய தீமஹி, தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்’ என்ற அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.