மகிழ்ச்சி: சென்னையில் கொரோனா பாதிப்பு 7% கீழ் குறைந்தது….

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 7 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1,51,560 ஆக உயர்நதுள்ளது.  இதுவரை 1,38,714 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில், 9,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3013 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்றும், சிகிச்சை  பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது, தற்போது,  7 சதவீதத்திற்கு கீழ் குறைந்துள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 9,833 ஆக, அதாவது 6.48 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் கூறி உள்ளது.

தினமும் சராசரியாக 12,000 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்படுகிறது.  அன்றாடம் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் 1000-க்கும் குறைவாக உள்ளது. அதேபோல், தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 4 ஆக குறைந் துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,140 பேர் சிகிச்சையில் உள்ளனர். அடுத்தபடியாக அண்ணா நகர் மண்டலத்தில் 993 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

குறைவாக உள்ள மண்டலமாக மணலி உள்ளது. அங்கு 116 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

சென்னையில் குறைந்து வரும் பாதிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.