டெல்லி:

கொரோனா தொற்றால் அபாய கட்டத்தை நெருங்கிய டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கொரோனாதொற்றில் இருந்து குணமடைந்ததால், இன்று மருத்துவ மனையில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், கொரோனா தடுப்பு தொடர்பாக பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்திலும் பங்குகொண்டார்.

இதைத்தொடர்ந்து, அடுத்த ஓரிரு நாளில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து,  டெல்லி  ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தநிலையில்,  அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டது. இதற்கிடையே அவருக்கு நிமோனியா காய்சல் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்து.

இதையடுத்து, அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்து, கடந்த வாரம் அவரை டெல்லி சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர்.  அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு காய்ச்சல் குறைந்து, அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில், அவர் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து, வீடு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது டெல்லி மாநில மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.