சேலம்:

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் எடப்பாடிக்கு இன்று பாராட்டு விழா நடைபெறுகிறது. முன்னதாக விழாவுக்கு சென்ற முதல்வருக்கு வழிநெடுக விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.

அப்போது, ஒரு இடத்தில் விவசாயிகளுடன் பேசிக் கொண்டே வயலில் இறங்கி உற்சாகமாக நாற்று நட்டார் . இது அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

காவிரி பாயும் விவசாய நிலங்களில் மத்தியஅரசு மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது. இதனால் விவசாய நிலங்கள் பாழாய்ப் போகிறது என்று விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் துயர் துடைக்கப்படும் என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சமி, கடந்த 20ம் தேதி (பிப்ரவரி 20, 2020) நடைபெற்ற  சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றினார்.

இதனால் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு  விவசாயிகள் இன்று  பாராட்டு விழா நடத்துகின்றனர். இந்த விழாவிற்கு சேலத்தில் இருந்து கார் மூலம் சென்ற முதல்வருக்கு போகும் வழியில் விவசாயிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

முதல்வரின் கார் திருவாரூர் மாவட்டம் கோயில் வெண்ணியை அடுத்த சித்தமல்லி கிராமம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு  வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்ததை கண்டதும், காரை விட்டு இறங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் வயலில் நாற்று நடவிக்கொண்டிருந்த  பெண்களுடன் பேசிக் கொண்டே முதல்வரும் வயலில் இறங்கி நாற்று நட்டார்.

முதல்வர் விவசாயிகளுடன் இணைந்து நாற்று நட்டது விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது