‘மகிழ்ச்சி:’ 2ஜியில் விடுதலையான ராஜாவுக்கு மன்மோகன்சிங் கடிதம்!


சென்னை:

2ஜி வழக்கில் விடுதலையான திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்ச்ர  ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக சிஏஜி வழக்கு தொடர்ந்தது. அதில்,  2ஜி முறைகேடாக ஒதுக்கீடு செய்ததன் காரணமாக  ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாக திமுக பெரும் சரிவை சந்தித்தது. இதுகுறித்த வழக்கு 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,  ராசா, கனிமொழி உள்பட   குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் கடந்த 21ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இதன் காரணமாக திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, ராஜா தனது தொகுதியான நீலகிரிக்கு சென்றார். அவருக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய ராஜா, மன்மோகன் சிங்குக்கு 2ஜி குறித்து விவரம் தெரிய வில்லை என்று பேசினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக காங்கிரஸ், திமுக உறவுக்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆ.ராஜாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், 2ஜி வழக்கில் உண்மை வென்றது என்றும்,  2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.