புதுடெல்லி: தான் இப்போதும் சரியான உடல்தகுதியுடன் இருப்பதாகவும், தனக்கு இன்னும் வயதாகிவிடவில்லை என்றும் சுவைபட பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் சுழல் நட்சத்திரம் ஹர்பஜன் சிங்.
பீல்டிங் செய்யும் போது கால்களுக்கு இடையில் பந்து புகுந்து செல்லும்போது அல்லது பந்தை எறியும்போது தோள்பட்டை பலவீனமாகப் போனாலோ, ஒஹோ அவருக்கு வயதாகி விட்டது எனலாம்.
ஆனால், நான் களத்தில்தான் ஆடிக்கொண்டிருக்கிறேன். ஆம், இந்திய கிரிக்கெட் சீருடையுடன் குறைந்தது 800 நாட்கள் களத்தில் இருந்திருப்பேன். அதாவது, விளையாட்டில் களத்தில் இருந்த நேரத்தைக் கூறுகிறேன்; நான் சாதனையாளன். எனக்கு யாருடைய கருணையும் தேவையில்லை.
திறமைகளுக்கு இடையிலான போட்டி என்றால், இந்தியாவில் சிறந்த வீரரை என் முன்னால் நிறுத்துங்கள். சவாலுக்குத் தயார், ஒரு கை பார்க்கிறேன்.
வலைப்பயிற்சியின்போது, நான் ஒரு மாதத்துக்கு 2000 பந்துகளை வீசுகிறேன் என்றால் அதுவும் நான் ஆடிய டாப் லெவல் கிரிக்கெட் அளவை வைத்துப் பார்க்கும் போது மிகவும் சிறந்ததுதானே!
எனக்கு வயதாகி விட்டது என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் சீரியஸாக, நான் அசாருதீன் கேப்டனாக இருக்கும்போது வந்தேன். மிகப்பிரமாதமான ஒரு பயணம். அதில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும்தான். சுமார் இருபதாண்டுகளுக்கு நான் என் கனவை நனவாக்க முடிந்ததற்கு கடவுளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இதுதான் என் கடைசி ஐபிஎல் என்று கூற மாட்டேன். என் உடல் நிலையைப் பொறுத்து முடிவெடுப்பேன். 4 மாதங்கள் பயிற்சி, யோகாவுக்குப் பிறகு 2013ல் இருந்ததுபோல் புதிய ஆற்றல் பெற்றுள்ளேன். 2013ல் நான் 24 விக்கெட்டுகளை ஐபிஎல் போட்டிகளில் கைப்பற்றினேன்” என்றார் ஹர்பஜன் சிங்.