புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்தியன் டிரேட் சர்வீஸ்(ஐடிஎஸ்) ஆகியவற்றில் பணிபுரிந்து, விடாது உழைத்து, தனது 5வது முயற்சியில் ஐஏஎஸ் தேர்வாகியுள்ளார் 27 வயது ஹர்ப்ரீத் சிங் என்ற இளைஞர்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; யுபிஎஸ்சி தேர்வின் மூலமாக, எல்லைப் பாதுகாப்பு படையில் உதவி கமாண்டராக பணியில் சேர்ந்தார். இந்திய – வங்கதேச எல்லையில் பணிபுரிந்த அவர், நெருக்கடியான பணி சூழலிலும் தொடர்ந்து படித்து வந்தார்.

கடந்த 2017ம் ஆண்டு 454வது ரேங்க் பெற்று இந்திய டிரேட் சர்வீஸ் என்ற தகுதிக்கு தேர்வானார். பின்னர், அப்பணியிலும் தொடர்ந்து முயற்சி செய்து, 2018ம் ஆண்டு 5வது முறையாக மீண்டும் சிவில் சர்வீஸ் எழுதி தேசியளவில் 19வது ரேங்க் பெற்றுள்ளார்.

“கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து, விடாமுயற்சியுடன், எத்தகைய இன்னல்கள் வந்தாலும் மனம் தளராமல், கடுமையாக உழைத்தால் நினைத்ததை அடையலாம்” என்று கூறியுள்ளார் ஹர்ப்ரீத் சிங்.