தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஹர்திக் பாண்டியா புகழாரம்

சிட்னி

ஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியில் உள்ள தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மூத்த வீரர் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி 20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.  சிட்னியில் நடந்த இறுதிப் போட்டியில்  ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற போதிலும் ஏற்கனவே இரு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளதால் தொடரைக் கைப்பற்றி உள்ளது.

இந்த போட்டிகளில் குறிப்பிடத்தக்கது புதியதாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் வீசிய பந்து வீச்சுக்களாகும்.  தமிழகத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஐபிஎல் போட்டிகளில் திறமையாக விளையாடியதையொட்டி இந்திய அணிக்குத் தேர்வாகி உள்ளார்.

நடராஜன் குறித்து மூத்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, “நடராஜன், நீங்கள் இந்த தொடரில் திறமையாக விளையாடி உள்ளீர்கள்.  இந்திய அணியில் உங்கள் அறிமுக போட்டியில் உங்களுடைய இந்த விளையாட்டு உங்கள் திறமையையும் கடின உழைப்பையும் எடுத்துக் காட்டுகிறது.

எனக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டிருந்தாலும் நீங்கள் தான் இந்த தொடரின் நாயகன் என்பதற்குப் பொருத்தமானவர் என்பது எனது எண்ணம் சகோதரரே.  இந்திய அணிக்கு இந்த வெற்றிக்காக எனது வாழ்த்துக்கள்” எனத் தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.