மும்பை: உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றில், வெறும் 55 பந்துகளில் 158 ரன்களை விளாசி, தனது உடல் தகுதி மற்றும் விளையாட்டுத் திறனை தீர்க்கமாக நிரூபித்துள்ளார் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா.

இவருக்கு முதுகு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக பல தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார் ஹர்திக். தற்போது, காயம் குணமான நிலையில், மும்பையில் உள்ளூர் போட்டியில் பங்கேற்ற இவர், சரவெடியான ஆடினார்.

ரிலையன்ஸ் 1 அணியின் சார்பாக டி-20 போட்டியில் விளையாடிய பாண்ட்யா, பாரத் பெட்ரோலியம் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில், 39 பந்துகளில் சதமடித்ததுடன், நிலைத்து நின்று, மொத்தம் 55 பந்துகளில் 158 ரன்களைக் குவித்து, இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் நின்றார்.

இதில் 20 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். மொத்தம் 144 ரன்கள் ஓடாமலேயே பெறப்பட்டுள்ளன. இதனால், ரிலையன்ஸ் அணி 20 ஓவர்களில் 238 ரன்களை எடுத்தது மற்றும் போட்டியையும் 104 ரன்கள் என்ற பெரிய வித்தியாசத்தில் வென்றது.