புதுடெல்லி: எனது அதிவேக அரைசதம் சாதனை, இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவினால் முறியடிக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங்.
கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை டி-20 தொடரில், வெறும் 12 பந்துகளில் அரைசதம் அடித்தார் யுவ்ராஜ் சிங். அது, இன்றுவரை உலக சாதனையாக இருந்து வருகிறது.
தற்போது யுவ்ராஜ் சிங் கூறியுள்ளதாவது, “எனது அதிவேக அரைசத சாதனையை முறியடிக்கும் திறன் தற்போதைய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு உண்டு. ஆனால், அவரை வழிநடத்துவதற்கு அணியில் யாராவது இருக்க வ‍ேண்டும்.
பஞ்சாப் அணியை எனக்குப் பிடித்தாலும், அந்த அணி நிர்வாகம் என்னை விரும்பவில்லை. நான் அந்த அணியிலிருந்து வெளியேறியபோது, நான் முன்பு அவர்களிடம் கேட்டிருந்த அனைத்து வீரர்களையும் ஏலம் எடுத்தனர்.
கடந்த 2014ம் ஆண்டு உலகக்கோப்பை டி-20 தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். நான் அந்தப் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும்கூட, மற்றவர்களும் தடுமாறவே செய்தனர். ஆனால், பலரும் என்னை மட்டுமே வில்லனாக்கினர்.
அந்த நேரத்தில் சண்டிகரில் உள்ள எனது வீட்டில் சிலர் கற்களை எறிந்தனர். நான் வீடு திரும்பியபோது, 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசியதற்காக எனக்கு வழங்கப்பட்ட பேட் மற்றும் பந்து என் கண்களில் பட்டது. ஆனால், எனது நேரம் முடிந்துவிட்டது என்பதையும் அப்போது உணர்ந்தேன்” என்று சோகம் இழையோட தெரிவித்துள்ளார் யுவ்ராஜ் சிங்.