குஜராத் : போலீஸ் பாதுகாப்பை படேல் இனத் தலைவர்கள் புறக்கணிப்பு!

கமதாபாத்

டேல் இனத் தலைவர் ஹர்திக் படேல் மற்றும் ஜிக்னேஷ் மேவானி தங்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை திருப்பி விட்டனர்.

படேல் இனத்தின் முன்னேற்றத்துக்காக துவங்கப்பட்ட படிதார் அனாமத் அந்தோலான் சமிதி (பாஸ்) இயக்கத்தின் தலைவர் ஹர்திக் படேல் மற்றும் ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் குஜராத்தை ஆளும் பா ஜ க வுக்கு எதிராக செயல்பட்டு வருவது தெரிந்ததே,  ஹர்திக் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்ததாக தகவல் வந்தது.   ஆனால் அதை அவர் மறுத்து விட்டார்.   மற்றொரு  தலைவரான ஜிக்னேஷ் மேவானி சமீபத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து சில கோரிக்கைகளை வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த இரு தலைவர்களும் ஆளும் பா ஜ கவை எதிர்த்து  குஜராத் காங்கிரஸை ஆதரிப்பார்கள் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.    ஆனால் இதுவரை இவர்கள் இருவரும் இது குறித்து எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.    இந்நிலையில் ஹர்திக் படேலுக்கு மிரட்டல்கள் இருப்பதால் குஜராத்தை ஆளும் பா ஜ க அரசு அவருக்கு போலீஸ் பாதுகாப்பை அளித்தது.   ஆனால் ஹரிதிக் தனக்கு மக்களின் பாதுகாப்பு இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு தேவை இல்லை என மறுத்துவிட்டார்.

இது குறித்து ஹர்திக், “எனக்கு என் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஆகவே போலீஸ் பாதுகாப்பு தேவை இல்லை.  போலீசார் எனக்கு பாதுகாப்பு தர வரவில்லை.  என்னைக் கண்காணிக்கவே வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.  அத்துடன் இதை குஜராத் அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.   இதை தொடர்ந்து தனக்கு காவலுக்கு வந்த போலீசாரை அவர் திருப்பி அனுப்பி விட்டார்.

இதே போல ஜிக்னேஷ் மேவானி, “இரு போலீஸ் காவலர்கள் எனது இல்லத்துக்கு காவலுக்கு அனுப்பப்பட்டனர்.  எனக்கு எந்த ஒரு மிரட்டலும் வரவில்லை என்பதால் நான் போலீஸ் காவலைக் கேட்கவே இல்லை.   ஒருவேளை அரசே எனது பாதுகாப்புக்காக போலீசாரை அனுப்பி இருக்கலாம்.   எனக்கு தற்போது குஜராத்தை ஆளும் பா ஜ க எனது வீட்டில் எதையும் அவர்களே பதுக்கி வைத்து விட்டு என்னை கைது செய்யவோ அல்லது எனது வாகனத்தில் அது போல செய்யவோ திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.   அதனால் நான் அவர்களை திருப்பி அனுப்பி விட்டேன்” என ஒரு பத்திரிகைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.