தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது ஹர்திப் பட்டேல் கன்னத்தில் ‘அறை’: குஜராத்தில் பரபரப்பு

காந்திநகர்:

குஜராத் சுரேந்திர நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து  பேசிய ஹர்திக் பட்டேலை ஒருவர் திடீரென  கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டேல் இனப்போராளியான, ஹர்திக் பட்டேல், பட்டேல் இன மக்களின் இட ஒதுக்கீட்டுக்குப் போராடி பிரபலமானார்.  இவர் சமீபத்தில், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதையடுத்து, காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  குஜராத் மாநிலம் சுரேந்தர் நகரில்  நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்த போது மேடை மீது ஏறிவந்த ஒரு நபர் சற்றும் எதிர்பாராத வகையில் ஹர்திக் பட்டேலை கன்னத்தில் அறைந்தார். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவரை தாக்கிய நபரை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.