கமதாபாத்

குஜராத் காங்கிரஸ் தலைவர் ஹர்திக் படேல் காவல்துறையினரால் ஜனவரி 18 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பிறகு இருக்கும் இடம் தெரியவில்லை என அவர் மனைவி கிஞ்சல தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் படேல் இன மக்களின் இட ஒதுக்கிடுக்காக போராடி வரும் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து  பணியாற்றி வருகிறார்.  கடந்த 2015 ஆம் வருடம் நடந்த படேல் இன ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது இவர் மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டது.   இந்த வழக்கு விசாரணைகளில் இவர் கலந்துக் கொள்ளவில்லை.

விசாரணைக்கு வராத ஹர்திக் படேல் மீது ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டை கடந்த வருடம்  குஜராத் நீதிமன்றம் பிறப்பித்தது.    அதையொட்டி கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி குஜராத் காவல்துறை ஹர்திக் படேலை கைது செய்தது.  அவருக்கு 4 தினங்கள் கழித்து ஜாமீன் கிடைத்த போதும் பதான் மற்றும் காந்திநகரில் பதியப்பட்டிருந்த மேலும் இரு வழக்குகளில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இரு வழக்குகளில் அவருக்கு ஜனவரி மாதம் 24 நான்காம் தேதி ஜாமீன் கிடைத்தது.  ஆயினும் கடந்த 7 ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போத் அவர் மீண்டும் ஆஜராகவில்லை.   கடந்த மாதம் 18 ஆம் தேதி அவர் கைது செய்யபட்டதில் இருந்து காணாமல் போய் உள்ளதாக தெரிய வந்துள்ளது.  இது குறித்து படேல் ஒதுக்கீட்டுப் போராட்ட அமைப்பினர் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தனர்.

அந்த கூட்டத்தில் ஹர்திக் படேல் மனைவி கிஞ்சல் கலந்துக் கொண்டார். அப்போது அவர், “கடந்த மாதம் 18 ஆம் தேதி அன்று ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டதில் இருந்து அவர் எங்குள்ளார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் காவல்துறையினர் எங்கள் வீட்டுக்கு வந்து அவர் எங்கிருக்கிறார் எனக் கேட்டு தொல்லை செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

படேல் இன தலைவர்கள் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் கடந்த 2015 ஆம் வருடம் படேல் இனத்தவர் மீது தொடுக்கப்பட்ட 1500 வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரி குஜராத் மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.   இந்த 1500 வழக்குகளில் ஹர்திக் படேல் மீது மட்டும் 20 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.