‘தாராள பிரபு’ மறுவெளியீட்டின்போதும், உங்களது மேலான ஆதரவை எதிர்நோக்குகிறோம் : ஹரிஷ் கல்யாண்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழக அரசு கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் முடிவால் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்த ‘தாராள பிரபு’ படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ‘தாராள பிரபு’ படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: எங்களது ‘தாராள பிரபு’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்து வந்த போற்றுதலுக்குரிய அன்பிற்கும் ஆதரவுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த இக்கட்டான சூழலைக் கடந்த பின், அதன் மறுவெளியீட்டின்போதும், உங்களது மேலான ஆதரவை எதிர்நோக்குகிறோம். அனைவரும் பாதுகாப்புடன் இருக்க இறையருள் துணை நிற்கட்டும்”.என தெரிவித்துள்ளார்.